வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். “மாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம்; இந்தத் தலக்கெட்டுக்கு அந்தக் கொடுப்பனை இல்லை.
கேரள அரசாங்கம், சாராயக் கடையை அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக் கொண்ட பிறகு, இப்போது வேலந்தாவளத்துக்குப் பெருமை சொல்ல மிஞ்சியிருப்பது கள்ளுக்கடை ஒன்று மட்டுமே. உடல் உழைப்பாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மானசீக மசாஜ் பார்லர் அது.
என்ன, உங்களுக்கும் வேலந்தாவளத்துக்கு வந்து கள்ளுக் குடிக்க வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசையா?
வாருங்கள், வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது.
கேரள மாநிலத்தின் எல்லைக் கோட்டின் மீதே அமைந்த அவ்வூருக்கு கோயமுத்தூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. பாலத்துக்கு அந்தப் பக்கமே அவை பயணம் முடிந்து திரும்பி விடும்; பாலத்துக்கு இந்தப் பக்கம் கேரளா.
பாலம் முடிந்தவுடனே சொன்னிக்கைப் பக்கமாக, ஆற்றின் தெற்குக் கரையில் கள்ளுக் கடை. பாலத்திலிருந்து தாழ்வான பார்வை பார்க்கும் போதே தரையில் மிதக்கும் மனிதர்கள் தட்டுப்படுகின்றனர். கூச்சலும், குழப்பமுமான பன்மொழிப் பேச்சுச் சப்தங்களோடு, தாளத்துடன் பாட்டுச் சப்தமும் கேட்கிறதா உங்களுக்கு?


ஊருக்குப் புதிதாக வருபவர்களுக்கே உரித்தான ஆர்வத்தோடு பராக்குப் பார்த்தபடியே வந்து சரிவில் இறங்குகிறீர்கள். அழுக்கும், கந்தையுமணிந்த மனிதர்கள், உடலுக்கும், மனதுக்கும், ஆறுதலை அந்த மகத்துவம் மிகுந்த பானத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். குத்த வைத்தும், மண்ணிலேயே அமர்ந்தும், நின்றும் எனப் பல மாதிரிகளில். அடேயப்பா, இவ்வளவு கூட்டமா என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படுகிறது. உள்ளூர் குடிமக்கள் கொஞ்சம் பேர் தான். தமிழத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையுமே அரசாங்கம் அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக் கொண்டதால், எல்லையை ஒட்டிய தமிழக ஊர்களிலிருந்தும், அதற்கு அப்பாலிருந்தும் வருகிற வாடிக்கையாளர்கள் அதிகம்.

உங்களைப் போலவே கோயமுத்தூரிலிருந்து கூட நகரப் பேருந்து பிடித்து இதற்கென வருகிறவர்கள் உள்ளனர். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையுமல்லவாஅதனால், வார நாட்களை விடத் தெரக்கு.
கடை வாசலெங்கும் நிறைந்திருக்கும் அவர்களின் நடுவே ஆங்காங்கு பிளாஸ்டிக் மக்குகள், மேனாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் நீண்ட முழு பாட்டில்கள் தட்டுப்படுகின்றன.
கண்ணாடி டம்ளர்களோ, பிளாஸ்டிக் டம்ளர்களோ அல்லாமல் அந்த மக்குகளில் தான் கள் குடிக்கின்றனர் என்பதையும்; கள்ளுக்கெனத் தனியே பாட்டில்கள் இல்லாமல், மேனாட்டு மதுவுடையதும், பீருடையதுமான பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர் என்பதையும் கண்டுகொள்கிறீர்கள்.

வெளியே இருந்து குடித்துக் கொண்டிருக்கும் மக்களால் ஆங்காங்கே வைக்கப்பட்டு விட்டு, அவற்றை வெற்றிலை மென்று கொண்டிருக்கும் வேலைக்காரியும், உயர்ந்த ஒல்லி வேலைக்காரனும் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்பால், பிள்ளைவாதக் கால்கள் கொண்ட இன்னொரு வேலைக்காரன் கழுவிக் கொண்டிருக்கிறான்.
வாந்தியெடுத்து வீலாகி, அதன் மீதே மொய்க்க மல்லாந்துவிட்டவனுக்குப் பக்கமே ஒருவன், போத்திறைச்சியோடு (எருமை இறைச்சி) ஆப்பம் தின்று கொண்டிருக்கிறான். ஊசிபாசிக்காரியின் இரண்டு வயதுப் பெண் குழந்தை கோப்பையை காலியாக்கிவிட்டு, தேர்ந்த குடிகாரர்கள் போல அழகாக வாய் துடைத்துக் கொள்கிறது.

என்ன, திகைத்து விட்டீர்கள்? இதுதான் அவர்களின் வாழ்க்கை; இதுதான் அவர்களின் அவலம்; இதுதான் அவர்களின் நிம்மதிபிஞ்சானாலும், பழுத்ததானாலும்.
ஒரு தலித் தம்பதிக்குள் ஸ்ருங்காரப் பிணக்கம், நல்ல சுதி. பின்னாலேயே ஆண்களின் சச்சரவில் புளித்த பச்சைத் தெறிகள் (கெட்டவார்த்தைகள்) சராங்கமாக விழுந்து கொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் நிறையப் பேர் குடித்துக் கொண்டிருக்கின்றனர்; அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். யாருமே இந்தப் பச்சைத் தெறிகள் பற்றிப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆவேசமாக ஒருவன், “நான் தாய்ப்பால் குடிச்சு வளந்தவன்டாஉன்னையாட்ட தந்தைப்பால் குடிச்சு வளருல…’ என்கிறான்.
இதுதான் அவர்களின் யதார்த்தம்.


வாருங்கள், இன்னும் வகை, வகையான அனுபவங்களை இங்கே பெறத்தானே போகிறீர்கள்! அதற்குள் இவற்றுக்கே நீங்கள் அசரவோ, அதிரவோ செய்தால், எப்படி? இந்த சூழ்நிலையிலும் குடிப்பிடச் சாளையிலிருந்து, “வாராய் நீ வாராய்…’ என்ற பாட்டுக்குரல் கேட்க வில்லையா?
முடிவிலா மோன நிலையை நீ, மலை முடிவில் காணுவாய், வாராய்…’ என்று அது அழைப்பது உங்களைத் தான். போங்கள், போய் கள்ளு பாட்டில் வாங்கி வாருங்கள். ஒரண்ணம், ரெண்டண்ணம் வீசினால், அவர்களின் முடிவிலா மோன நிலையை தற்காலிகமாகவேனும் நீங்கள் அடையலாம்.
விநியோகிப்பிடத்தில் வாடிக்கையாளர்கள் வந்து, வந்து, “சின்னக் கவுண்ரேஎனக்கு ஒரு பாட்டல் குடுங்கொ, குமாருநமக்கு ரெண்ட குடப்பா…’ என்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர், “தென்னையொண்ணு குடுங்க, பனையொண்ணு குடுங்க…’ என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். பேதம் பிரித்துக் கேட்காதவர்களுக்கு தென்னங்கள்ளே கொடுக்கப்படுகிறது.

அரை பாட்டில் கேட்கும்போது,நீங்கள் எதிர்பார்க்கிறபடி பட்டையான மேனாட்டு அரைபாட்டிலிலோ, உருண்டையான சிறு பீர் பாட்டிலிலோ அல்ல; இந்த முழு பாட்டிலிலேயே பாதியளவு கள்ளு தரப்படுகிறது. பாதியளவு கள்ளு உள்ள பாட்டில்கள் இல்லாவிட்டால் கப்பெடுத்து வரச்சொல்கிறான் விற்பனையாளன்.
கழுவப்பட்ட மக்குகளை எடுத்து வரும்போது, அங்கே அதற்கு கப்பு என்று பேர் எனத் தெரிந்து கொள்கிறீர்கள். அதில் உத்தேச மதிப்பீடாக கண்ணால் அளவெடுத்தே பாட்டிலைச் சரித்து பாதியளவு ஊற்றுகிறான்; மிச்சமுள்ள பாதி, அரை பாட்டில் கேட்கும் யாருக்காவது வழங்கப்படுகிறது.
சின்னக் கவுண்ரேஎன அழைக்கப்பட்ட குமார், கவுண்டர் ஜாதியினத்தவன் என நீங்கள் நினைத்திருக்கையில், அவன் வெளிப்படையாகவே ஜாதி தெரியக்கூடிய தலித் வாடிக்கையாளர்களிடம் கன்னடம் பேசுவது உங்களைக் குழப்புகிறது. உயர் ஜாதியினராகத் தெரியக்கூடிய சிலரும் அவனிடம் அதே போல கன்னடத்தில் பேசுகின்றனர்.
விஷயம் இதுதான்: அவர்கள் கவுண்டர்கள் அல்ல, கவுடர்கள் எனப்படும் ஒக்கலிகர்கள். இங்கத்திய மக்களுக்கு கவுண்டர்களுக்கும், கவுடர்களுக்கும் வேறுபாடு புரியாமல் அவர்களையும் கவுண்டர் இனத்தின் வேறு குலம் எனக் கருதி ஒக்கலிகக் கவுண்டர்கள் என்று சொல்வர்.
வாஸ்தவத்தில் இங்கே பெருவாரியாக இருக்கும் வெள்ளாளக் கவுண்டர்கள், பூளுவக் கவுண்டர்கள் ஆகியோர்தான் கவுண்டர் இனத்துக்கு உட்பட்டவர்கள்.
ஜாதிகள் பற்றி விலாவாரியாகப் பேசுவது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நானும் ஜாதிமதம் பார்க்கிறவனல்ல; ஆனால், ஜாதிகள் வேண்டாமென்றாலும் நம் சமூகங்களில் ஒழித்துவிட முடிகிறதா? மேலும், இது கிராமப்றம். ஏன், நகரங்களிலும், உங்கள் குடும்பத்தில், தெருவில், அலுவலகத்தில் ஜாதி குறுக்கிடாமல் இருக்கிறதா?
சமூகம், அரசியல், கலைஇலக்கியம் எல்லாவற்றிலும் ஜாதி இருக்கிறது. இனம், மதம் அவற்றின் இன்னோரன்ன பிரிவுகள் இருக்கின்றன. இந்தியா முழுக்கவும் என்பது மட்டுமின்றி, அன்னிய நாடுகளிலும் இனப் பேதம், பிரிவு பேதம், அதன் சமூக அரசியல் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன.
ஜாதி, மதம் இல்லாத மனித சமுதாயம் காலங்காலமாகவே வெறும் லட்சியக் கனவு தான்; யதார்த்தம், நடைமுறை என்பவை எப்போதும் கனவுகளுக்கு எதிரானவை.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நீங்களே அறிந்தோ, அறியாமலோ உங்களுக்குள்ளேயும் ஜாதிமத உணர்வுகள் இருக்கத்தான் செய்யும். கவுண்ரே என்ற அழைப்பையும், கன்னட உரையாடலையும் கேட்டு நீங்கள் குழம்பப் போய்த் தானே இப்போது இந்தப் பேச்சு வந்தது! சரி, இனி வேண்டாமென்றால் விட்டு விடுகிறேன்.
நீங்கள் வந்தது கள்ளு குடிப்பதற்காக; உங்களின் இந்த ஓய்வு நாளை உற்சாகமாகக் கழிப்பதற்காக. அதில் குறுக்கிடாமல் விலகிக்கொள்கிறேன். நானும், நீங்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்தால் கூட உங்களிடம் அட்சரம் மிண்ட மாட்டேன், போதுமா? இப்போது உங்கள் முறை. கள்ளு என்ன விலை என்று கேட்டு, இருபது ரூபாயை நீட்டியதும், “”ஒண்ணார்ருவா சில்ற இருந்தாக் குடுங்கணா,” என்றபடியே, பணம் பெற்று, பாட்டிலை எடுத்து வைக்கிறான் விற்பனையாளன். மீதிப் பணம், பலகை மேல் வைக்கப்பட்ட பாட்டிலை எடுத்துக் கொள்ளும் நீங்கள், “”என்னங்ணா மூடியில்லாம ஓப்பனா இருக்குது?” என்று சந்தேகிக்கிறீர்கள். கணக்குகள் எழுதத் தொடங்கிவிட்ட விற்பனையாளன், நிமிர்ந்து உங்கள் முகத்தை அவதானிக்கிறான். “”தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றீங்களா?”
“”
ஆமாங்ணா. கோயமுத்தூர்லர்ந்து வர்றன்…”
“”
கள்ளுக்கு மூடி போடக்குடாதுங்ணா. நொரை பொங்கிரும்,” என்று சொல்லி விட்டு, கணக்கில் மூழ்குகிறான்.
பாட்டிலோடு படியிறங்குகிறீர்கள். தமிழ், மலையாள, கன்னடக் குரல்களின் நடுவே நரிக்குறவர்களின் நாகரியோ, என்னவோ பாஷை, அவர்கள் கூண்டுக்குள் வைத்திருக்கும் கதுவேரிகளைப் போலவே, கீக்கலக்கோ, கீக்கலக்கோ என்று கெச்சட்டம் போடுகிறது.
ஆதிவாசிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மலசன் ஒருவன் உடும்பைக் கயிற்றில் கட்டிக் கோர்த்து வர, அங்குள்ளவர்கள் விலை விசாரிக்கின்றனர். நீங்களும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஞாபகம் வர, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உங்களின் மிக அண்மையில், “ஆய்…’ என்று சப்தம் எழவே திடுக்கிட்டுத் திரும்புகிறீர்கள். சட்டை மேல் பனியன் அணிந்த ஒரு மனப்பிசகர், குங்பூ போசில் காற்றில் கைகள் வீசி, ஒரு காலில் அரை வட்டமாகச் சுழன்று, தூக்கிய மறுகாலால் இல்லாத எதிரியின் முகரக்கட்டையை பேர்த்து விடுகிறார்.
பிறகு, சுற்றியுள்ளவர்களைக் கை நீட்டி துப்பாக்கியால், “ட்ரிஞ்சுக்கோவ்ட்ரிஞ்சுக்கோவ்…’ என்று சுட்டுவிட்டு, சட்டென முகத்தைப் பரிதாபமாக ஆக்கி, “”சாமீடீ குடிக்கறக்கு ரெண்ட்ருவா குடுங் சாமீ…!” என்று வெள்ளை வேட்டிக்காரரிடம் கையேந்துகிறார்.
“”
நீயெப்ப டீ குடிச்சிருக்கற ஜாக்கிசான்? தென்னம் பாலு தான குடிப்ப?” என்றபடியே, பாக்கெட்டில் தொளாவும்போது தலையைச் சொரிந்தபடியே சொத்தைப் பல் தெரிய அவ்வளவு வெகுளியாகச் சிரிக்கிறார்.
எல்லாத் தெருப்பைத்தியங்களையும் போலவே அவருக்கும் ஒரு கதை, அவர் பைத்தியமானதற்குக் காரணம், இருக்கிறது. அந்த சோகம் இப்போது எதற்கு? நீங்கள் வந்திருப்பது கொண்டாடுவதற்காக. எனவே, நீங்கள் பாட்டுக்கு குடிப்பிடத்துக்கு வருகிறீர்கள்.
சவுரியம் வேண்டுபவர்கள், சாவகாசமாக அமர்ந்து குடிப்பவர்கள், சத்தஞ்சள்ளுகளை விரும்பாதவர்கள், பாடக சிகாமணிகள், ரசிக சிகாமணிகள் ஆகியோருக்கான இடம் அது. சாக்கணாக் கடையும் அதோடே இணைந்திருக்கிறது.
உட்காருவதற்கும், ஏனங்களை வைப்பதற்கும் பெஞ்ச்சுகள் தான். ஏனங்கள் பெஞ்ச் உயரமாக இருக்கும் என்பது மட்டுமே வித்தியாசம். குடிமக்கள் அவற்றில் வழிந்திருக்க, தரையில் அமர்ந்து கள்ளுக் கேனில் தாளமிட்டபடி வெங்கலக் குரலில் பாடிக் கொண்டிருக்கிறார் பதிமலையான் பண்டாரம். குடிமக்களில் சிலர், தலையாட்டியபடியும், கைகளை அசைத்தபடியும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
காலி பாட்டில்களையும், கப்புகளையும் சேகரித்துக் கொண்டிருந்த உயரமான ஒல்லி வேலைக்காரன், “”வாங் சார்வாங்! எடமிருக்குது வாங்! டேய், தள்ளிக் குக்குடா! நீயொருத்தனே ரெண்டாளெடத்துல நெரவீட்டிருந்தீன்னா வாரவீக குக்க வேண்டாமாடா…” என்று அத்தச்சோட்டுப் பெரியவரை, “அடே புடேபோட்டு அதட்டி, உங்களுக்கு இடம் பண்ணிக் கொடுக்கிறான்.
அதைக் கேட்டு நீங்கள் தருகும்போது, வேலைக்காரன் உங்களது சுத்த சுகாதாரங்களைப் பார்த்து, “”இங்கெல்லாம் அப்புடித்தானுங் சார், பதனாறடி தள்ளி நின்னு கையக் கட்டி, “சாமீ, சாமீன்னு கும்பட வேண்டியவன், பக்கத்துல வந்து குக்கிக்குவான். வரப்படாத எடத்துக்கு வந்தமுன்னா அப்புடித்தானுங்.
“”
சுத்த பத்தமா இருந்தானுகன்னாலுந் தேவுல. கெரகத்த, தண்ணி வாக்கறானுகளா ஒண்ணா! பாருங், அவம்மேலுந் துணியுமெல்லாம் தண்ணியக் கண்டே மாசமாயிருக்குமாட்டிருக்குது. நீங் உக்காருங் சார்…” என்று இன்னும் கலவரப்படுத்துகிறான். நீங்களும் சங்கடத்தோடு அழுக்கு பெஞ்ச்சின் மீது கைக்குட்டையை விரித்து உட்கார்ந்து கொள்கிறீர்கள்.
“”
சார், கப்பு வேணுங்ளா சார்? இருங், எடுத்தாரன்,” என்று போகிறவன், தன் கைகளிலிருந்த காலி பாட்டில் மற்றும் கப்புகளின் சேகரத்தைக் கழுவப் போட்டுவிட்டு, கழுவப்பட்ட கப்பு ஒன்றை உங்களுக்காக எடுத்து வருகிறான். பக்கத்தானிடமிருந் அரிப்பியை மட்டு உதிரும்படிக் கவிழ்த்துத் தட்டி சுத்தப்படுத்தி உங்களிடம் நீட்டுகிறான். “”சாக்கணா என்ன வேணுங் சார்?” என்று கேட்டு, இருப்பவற்றை ஒப்பித்து, சாக்கணாக் கடை சேச்சியிடமிருந்து வாங்கி வந்து கொடுக்கிறான். “”வாங்கீட்டுப் போனதுக்கெல்லாம் கரெக்ட்டா காசு வாங்கிக்க கொத்தவர!” என சேச்சி சொல்ல, “”சாரு, நம்ம ரெகள்ருக் கஸ்ட்டம் பருதான்,” என்று பதில் கொடுத்து விட்டு, சொன்னான்
“”
இங்கெல்லாம் அப்புடித்தானுங் சார். பின்னக் குடுக்கறங்கற பேச்சே இருக்கப்படாது. தெரக்குல கெவுனிக்க முடியுங்ளா…? அலுங்காம முட்டீட்டுப் போயிருவானுக. கண்ணு தப்புனாப் போதும்ரெண்டு பாட்டல் வாங்கீட்டு வந்து ஒண்ணக் குடிச்சுப் போட்டு, ஒண்ண இப்புடியே இடுப்புல சொருகி வேட்டிய மடிச்சுக் கட்டீட்டுப் போயிருவானுக.
“”
ஆனாட்டி, உங்களப் பெலத்தவீககிட்ட அப்புடி கட்டன்ரைச்சா இருக்க முடியுங்களா…? நீங்க எத்தன ரீஜண்டான ஆளு! அதனால தான் நம்ம ரெகள்ருக்கஸ்டம்பருன்னு சொன்னன். அப்புடிச் சொல்லீட்டா, அவியளுக்கும் ஏச்சுப் போட்டுப் போயிருவாங்களோன்னு சம்சியம் இரகாது பாருங்!
“”
பின்னியொரு காரியம்ங் சார்நம்முளுக்கு கப்பு, பாட்டல் பொறுக்கறது தான் வேல. அது கடை வேலைங் சார். சாக்கணாக் கடைக்கு கையாள் தனியாக் கெடையாது. அதோடொண்ணா இதையும் பாத்தம்னா ச்சேச்சிக்குஞ் செரி, உங்களப் பெலத்தவீகளுக்குஞ் செரிஒரு சகாயம். மனுசனுக்கு மனுசன் வேற என்னுங் சார்? அப்பற அவியளாப் பாத்து ரெண்டு, மூணு குடத்தா பீடிக்குக் கீடிக்கு ஆகும்.
“”
பின்னென்னுங் சார், நாமென்ன அதைய வெச்சு திப்புசுல்தான் கோட்டையா கட்ட முடியும்? இல்ல, நம்ம தருத்தரந்தான் தீந்தரப் போகுதா…? ஆனாட்டி, இந்த மாறக் கச்சராப் பார்ட்டீகளுக்கெல்லாம் கள்ளு சாக்கணா வாங்கிக் குடக்கறக்கு நிக்கமாண்டனுங் சார். அதுகளே ஒர்ருவா, ரெண்ட்ருவாய்க்கு சாக்கணா வாங்கீட்டு நக்கீட்டுக் குடிக்கறதுக. அதுகளுக்கு வாங்கிக் குடத்தா நம்முளுக்கென்ன ட்ரிப்சு கெடைக்கும்? அதெல்லாம் அவனுகளே போயி வாங்கிக்க வேண்டீதுதான்.
“”
அப்பற இன்னியொன்னுங் சார். எச்சக் கப்புப் பொறுக்கறவன்னாலும் நான் சாதீல —-. சாதி அந்தசுகெவுரிதிய உட்டுக்குடக்க முடியுங்களா…? இங்க வாரதுகள்ல ஈன சாதிகதான் தாஸ்த்தி. உங்களையாட்ட கோயமுத்தூரு கட்டி அனேக ஊருகள்ளயுமிருந்து வருவானுக. அவனுக என்னுதாம் பேண்டு போட்டு வந்தாலும், உங்களையாட்ட வெள்ளைஞ் சொள்ளைமா மினுக்குனாலும் ஈன சாதி, ஈன சாதி இல்லீன்னு ஆயிருமாங் சார்? பாத்ததுமே கண்டுபுடிச்சுப் போடுவேன். மசுருன்னாக் கூட அவனுகளுக்கு வாங்கிக் குடக்க நிக்கமாண்டன். “தேவைன்னா, நீயே போயி வாங்கிக்கடா பண்ணாடி…’ன்ட்ருவன்.
“”
இங்கத்தவனுகளுக்கு நம்மட சாதி என்னோன்னு தெரியறதுனால எவனும் நிமண்ட மாண்டான். பின்ன, அவனுக எச்சப் பாட்டலு, எச்சக் கப்பு பொறுக்களுக்கு நம்ம தலைல எளுதி வெச்சிருக்கறான். எச்சையத் துப்பி அளிக்க முடியுமா, அளீ லப்பர்ல அளிக்க முடியுமா? ஏதோ நம்ம கேடுகாலம்! இல்லீன்னா, ஏருப் படிக்கற கையி, ஏனுங் எச்சக் கப்பு பொறுக்கோணும்?

Thanks Dinamalar

Leave a comment